அந்தக் கண்களைப் பார்த்த பிறகு
Baskar Manimegalai ·
மசினகுடி–மாயாறு பயணத்தில் சந்தித்த யானைகளை நினைத்துப் பார்க்கிறேன். குட்டிகளுடன் இருந்த தாய் யானை, தனியாக இருந்த ஆண் யானை. அவற்றின் முழு உருவமும் நினைவில் இருக்கிறது. ஆனால் அந்தச் சந்திப்பை இப்போதும் எனக்குள் உயிரோடு வைத்திருப்பது அவற்றின் கண்கள்தான்.
ஒரு யானை நம் கண்களைப் பார்ப்பதாக உணரும் அந்தச் சில நொடிகளைச் சொல்வது சிரமம். அது நம்மைக் கடந்து பார்க்கவில்லை; அங்கே நிற்கும் நம்மைக் கவனிக்கிறது என்று தோன்றுகிறது. கூட்டமாக நாம் நின்றாலும், அந்தப் பார்வை நம் ஒவ்வொருவரிடமும் தனித்தனியாக வந்து சேர்வதுபோல் இருக்கிறது. அப்போது யானையைப் பார்த்துக்கொண்டிருந்த என் கவனம், அதன் முன்னால் நிற்கும் என் மீதும் திரும்புகிறது. நான் எப்படி நிற்கிறேன், என்ன செய்கிறேன், என் அசைவில் என்ன வெளிப்படுகிறது என்பதெல்லாம் எனக்கே தெரியத் தொடங்குகிறது.

அதன் கண்களில் என்ன இருக்கிறது என்று அறிய முயல்கிறேன். கோபமா, பயமா, பதற்றமா, அன்பா? அடுத்த கணமே, நான் உணர்வதை அதனிடம் தேடுகிறேனோ என்றும் தோன்றுகிறது. அதன் உணர்வை என்னால் உறுதியாகச் சொல்ல முடியாது. ஆனால், எங்களுக்கிடையில் எதுவுமே நிகழவில்லை என்றும் சொல்ல முடியவில்லை. என் கண்கள், முகம், உடல் அசைவுகள் வழியாக ஏதோ ஒன்று அதற்குப் போய்ச் சேர்வதாக உணர்கிறேன். நானும் அதன் பார்வையிலிருந்து எதையோ பெற்றுக்கொள்கிறேன். என்ன பெற்றேன் என்பதைச் சொல்லத்தான் சொற்கள் போதவில்லை.
இரண்டு மூன்று முறை இந்த அனுபவம் எனக்கு ஏற்பட்டிருக்கிறது. ஒவ்வொரு முறையும் சிறிது நேரத்திற்கு என் வழக்கமான மனநிலையிலிருந்து விலகிவிடுகிறேன். வெளியிலிருந்து பார்ப்பவருக்கு, ஒரு மனிதன் யானையைப் பார்த்துக்கொண்டு நிற்பதுபோலத்தான் இருக்கும். எனக்குள்ளோ, அந்த நேரத்தில் வேறு எதையும் நினைக்க முடியாத அளவிற்கு ஏதோ நிகழ்ந்துகொண்டிருக்கிறது. அங்கிருந்து வந்த பிறகும் அந்தப் பார்வை நினைவில் திரும்பத் திரும்ப வருகிறது.
அதை மறுபடியும் அனுபவிக்க விருப்பம் இருக்கிறது. ஆனால் அதற்காகவே யானையைத் தேடிச் செல்வதில் எனக்குத் தயக்கம் உண்டு. இயல்பாக ஒரு சந்திப்பு நிகழ்வதற்கும், நமக்கு அந்த அனுபவம் வேண்டும் என்பதற்காக அதைத் தேடித் தொடர்வதற்கும் வேறுபாடு இருக்கிறது. முதல்முறை கிடைத்த உணர்வை மறுபடியும் பெற வேண்டும் என்று அதன் பின்னால் போகும்போது, நான் யானையிடம் என்ன எதிர்பார்க்கிறேன் என்ற கேள்வி வருகிறது.
அது குட்டிகளுடன் இருக்கும் ஒரு தாயாக இருக்கலாம். தனியே செல்லும் ஓர் ஆண் யானையாக இருக்கலாம். அதற்கென்று அன்றைய பொழுதும், செல்ல வேண்டிய இடமும், செய்ய வேண்டிய செயல்களும் இருக்கின்றன. அந்த வாழ்க்கையின் நடுவில்தான் நாம் சிறிது நேரம் அதைச் சந்திக்கிறோம். நமக்கு மறக்க முடியாத அனுபவமாக இருக்கும் அந்த நேரம், அதற்கு நாம் குறுக்கிட்ட நேரமாகவும் இருக்கலாம். நமக்கு ஏற்பட்ட பரவசத்தை வைத்தே அந்தச் சந்திப்பை முழுமையாகப் புரிந்துகொள்ள முடியாது.
பறவைகளைப் பார்க்கும்போதும் இதே தயக்கம் எனக்கு ஏற்படுகிறது. இன்னும் கொஞ்சம் அருகில் பார்க்க வேண்டும், இன்னும் ஒரு படம் எடுக்க வேண்டும் என்று தோன்றும். நம்முடைய ஆர்வம் எளிதில் நிறைவடைவதில்லை. ஆனால் அந்த உயிர் எவ்வளவு நேரம் நம் ஆர்வத்தைத் தாங்கிக்கொண்டிருக்க வேண்டும்? நாம் அதைப் பார்த்து மகிழ்கிறோம் என்பதால், நம் அருகாமையை அது ஏற்றுக்கொண்டுவிட்டதாக நினைக்க முடியுமா?
அந்த உயிருக்கு அச்சம் ஏற்படாத அளவில் நின்று பார்த்துவிட்டு, அங்கிருந்து விலகிவரத் தெரிந்திருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். பார்க்கக் கிடைத்தது போதும் என்று நம்மை நிறுத்திக்கொள்வது சில நேரங்களில் கடினமாகத்தான் இருக்கிறது. குறிப்பாக, அந்தச் சந்திப்பு நம்மை ஆழமாகத் தொட்டிருக்கும்போது. இருந்தாலும், அந்தக் கடினத்தை நாம்தான் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
காட்டை அசுத்தப்படுத்தக் கூடாது என்றால் பிளாஸ்டிக் போடாமல் இருப்பதும், தண்ணீரைக் கெடுக்காமல் இருப்பதும் நினைவுக்கு வருகின்றன. அங்கே சென்றதற்கான எந்தப் பொருளையும் விட்டுவரவில்லை என்ற நிறைவும் நமக்கு ஏற்படலாம். ஆனால் நம்முடைய இருப்பையே ஒரு உயிர் தொந்தரவாக உணர்ந்திருந்தால்? நம்மைக் கவனித்துக்கொண்டே இருக்க வேண்டிய கட்டாயத்தை அதற்கு ஏற்படுத்தியிருந்தால்? எதையும் கீழே போட்டுவிடாமல் திரும்பியதோடு நமது பொறுப்பு முடிந்துவிடுகிறதா?
யானையின் கண்களை நினைக்கும்போது இந்தக் கேள்விகளும் சேர்ந்தே வருகின்றன. அந்த அனுபவம் மறுபடியும் கிடைக்குமா என்று தெரியாது. கிடைத்தாலும், அதற்குள் நீண்ட நேரம் இருக்க வேண்டும் என்று இனி தோன்றுமா என்பதும் தெரியவில்லை. நான் அங்கே நின்று பெற்றுக்கொண்ட உணர்வோடு திரும்பிவரலாம். அந்த யானை என்னைக் கவனித்துக்கொண்டிருக்க வேண்டிய தேவை முடிந்து, தன் வேலையைத் தொடர வேண்டும். அதற்கான இடத்தை விட்டுவிட்டு வருவதும் அந்தச் சந்திப்பின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும் என்று தோன்றுகிறது.
- பாஸ்கி
Your reader access is saved on this browser.